விடுதியில் தங்கியிருந்த வர்த்தகரை கொள்ளையடித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது!

two-constables-arrested-for-robbing-businessman-at-lagum-mall

 கடுவெல நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வர்த்தகர் ஒருவரைத் தாக்கி, அவரது உடைமைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வர் கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மாலபே பொலிஸில் கடமையாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், குறித்த விடுதியின் முகாமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் ஆவார். அவர் பியகம பிரதேசத்தில் உள்ள தனது பிள்ளையைப் பார்க்க வந்து, மீண்டும் வீடு திரும்புவதற்காக கடுவெல நகருக்கு வந்துள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அரச வங்கிக்கு அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில், நான்கு சந்தேகநபர்களும் விடுதி உரிமையாளருடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் வர்த்தகர் தங்கியிருந்த அறைக்குச் சென்று, சோதனை நடத்த வேண்டும் என்று கூறி பலவந்தமாக கதவைத் திறக்கச் செய்துள்ளனர்,


அப்போது வர்த்தகரைத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தையும் ஒரு தங்க மோதிரத்தையும் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காலி நாகொட மற்றும் இமதுவ கோமள பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய இரு சந்தேகநபர்கள் பிலியந்தலை மற்றும் கினிகத்தேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post