நிறுத்தப்பட்ட யானை குளியல் மீண்டும் தொடங்கியது - பின்னவலவிலிருந்து ஓர் அறிவிப்பு

pinnawala-elephants-bathing-resumes

தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் ஓர் அறிவித்தலை வெளியிட்டு, அண்மைய நாட்களில் இலங்கையைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பின்னவல யானைகள் அநாதை இல்லத்தில் யானைகளை மா ஓயாவுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.





மோசமான வானிலை காரணமாக மா ஓயாவின் நீர் கலங்கியிருந்ததுடன், மணல் மற்றும் சேற்றுப் படிவுகள் அடித்து வரப்பட்டதால் யானைகள் குளிக்கும் பகுதி மூழ்கியிருந்ததாக திணைக்களம் தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த மணல் படிவுகளுக்கு இடையில் யானைகளுக்கு ஆபத்தான கண்ணாடித் துண்டுகளும் இரும்புப் பாகங்களும் இருந்ததும் அவதானிக்கப்பட்டது.




யானைகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, பின்னவல யானைகள் அநாதை இல்லம் யானைகளை மா ஓயாவுக்கு அழைத்துச் செல்வதை தற்காலிகமாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியது.

பின்னர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், மா ஓயாவில் யானைகள் குளிக்கும் இடத்தில் தேங்கியிருந்த மணல் மற்றும் பிற கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தனது அறிவித்தலில் உறுதிப்படுத்தியுள்ளது.



அதன்படி, யானைகளை வழக்கம் போல் மா ஓயாவுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post