மொனராகலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறிகல, மொனரகலே தோட்டத்தில் அமைந்துள்ள சில வீடுகளின் சுவர்கள் திடீரென வெடித்ததால் ஏற்பட்ட ஆபத்தான நிலை காரணமாக, அங்கு வசித்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட வீடுகளின் சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகள்
மற்றும் சாய்வுகள் காரணமாக அந்த வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருந்ததாக மொனராகலை பிரதேச செயலாளர் சதுர சமரசேகர தெரிவித்தார்.வீட்டிலிருப்பவர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 8ஆம் திகதி இந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் மொனராகலை மயூரகிரி கனிஷ்ட வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அனர்த்தப் பகுதியை பார்வையிடவும், இடம்பெயர்ந்த முகாமில் உள்ள குடும்பங்களின் நலன் விசாரிக்கவும் மொனராகலை மாவட்ட செயலாளர் ஜே. ஜே. நிஷாந்தவும் அங்கு வருகை தந்தார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தொடர்ச்சியாக வழங்குமாறு மாவட்ட செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இடம்பெயர்ந்தவர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக முறையான சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு மேலதிகமாக அறிவுறுத்தினார்.
Tags:
News