மோசமான வானிலை மற்றும் திட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகளை அடையாளம் காணவும், நஷ்டஈடு வழங்கவும் முறையான மற்றும் திறமையான தரவு சேகரிப்புக்கான ஒரு சிறப்பு பொறிமுறையைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நேற்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நஷ்டஈடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.நஷ்டஈடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சரியான தகவல்களை தொழில்நுட்ப முறைப்படி பெறுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்,
அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்ளாத வகையில் நிரந்தரமான மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மண்சரிவுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக 128,925 முழுமையான வீட்டுச் சேதங்களும், 44,574 பகுதியளவு வீட்டுச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக வீட்டுவசதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷான் மற்றும் தேசிய வீட்டுவசதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அரவிந்த சிறிநாத ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
Tags:
News