வென்னப்புவ, லுனுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் பாகங்கள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உட்பட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட விசேட விசாரணைக்குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவு முழுவதும் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமைகளுக்கு மத்தியில் முப்படையினர், பொலிஸார், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நிவாரண சேவைக் குழுக்கள் இணைந்து மேற்கொள்ளும் விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு விமானப்படை தீவிரமாக பங்களித்து வந்தது. லுனுவில பாலத்திற்கு அருகிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த ஹெலிகொப்டர் நேற்று கின் ஓயாவில் வீழ்ந்துள்ளது.
விமானம் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சந்தர்ப்பத்தில், விமானிகள் அதனை பாதுகாப்பாக தரையிறக்க பெரும் முயற்சி எடுத்த போதிலும், அந்த முயற்சி தோல்வியடைந்து விமானம் நீரில் வீழ்ந்துள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன், பிரதேசவாசிகளும் நிவாரணக் குழுக்களும் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு, விமானத்தில் இருந்த அதிகாரிகளை மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், 41 வயதுடைய விமானி, விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த விமானியான விங் கொமாண்டர் சியம்பலாபிட்டிய, அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான முதுமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்திருந்தார். இந்த விபத்து நடந்த அடுத்த நாள் நடைபெறவிருந்த தனது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவும் அவர் தயாராக இருந்தமை மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகும்.
ஹெலிகொப்டர் அகற்றப்பட்ட விதம் காணொளிக்கு இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Trending

