முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷ இன்று (01) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவர சூழ்நிலையின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு இழப்பீடு கோரிய சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அடுத்த சில தினங்களுக்குள் கைது செய்யப்படலாம் என அரசாங்கப் பத்திரிகையான சிலுமின முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
திஸ்ஸமஹாராம, மாகமவில் அமைந்துள்ள தனது வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி சாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய்க்கும் (ரூ. 15.2 மில்லியன்) அதிகமான தொகையை கோரியிருந்த போதிலும், குறித்த காணி அவருக்கு சொந்தமானது அல்ல என்றும், அதில் எந்தவொரு குடியிருப்பு கட்டிடமும் இல்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு நெல் சேமிப்பதற்கான வசதி மட்டுமே உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த சொத்து தனது வசம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சத்தியக்கடதாசி சமர்ப்பித்திருந்த போதிலும், மேலதிக விசாரணைகளில் அந்தக் காணி வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 2023 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில், அந்த நிலத்தில் 14.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடும், இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான சேதமடைந்த களஞ்சிய அறையும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இழப்பீடு வழங்க முடியாது என பொது நிர்வாக அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும், முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை செய்ய லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த கொடுப்பனவுகளை அங்கீகரித்த அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.
Tags:
Political