நேற்று (ஏப்ரல் 27) மாலை கொஸ்கொட, பியகம மர ஆலைக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் ஏற்பட்ட பாரிய விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மாலை 4.30 மணியளவில் பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோட்டார் காரொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், மோட்டார் காரின் சாரதியாகச் செயற்பட்ட பலபிட்டிய, வெலித்தறையைச் சேர்ந்த 38 வயதுடைய கசுன் தனுஷ்க டி சில்வா, அவரது 11 வயது மகன் மற்றும் மகாபிட்டிய, கொஸ்கொடவைச் சேர்ந்த 59 வயதுடைய புஷ்பா பிரேமலதா டி சில்வா ஆகியோர் அடங்குவர்.
எவ்வாறாயினும், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் காரின் சாரதியான கசுன் தனுஷ்க டி சில்வா (38) நேற்று (ஏப்ரல் 28) காலை மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில் கடவைக்கு பொருத்தப்பட்டிருந்த சமிஞ்சைகளை பொருட்படுத்தாமல் மோட்டார் கார் ஓட்டப்பட்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் இதுவரை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொஸ்கொட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சில்வா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எரந்த (70810) உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.