மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது என்னவென்றால், இதுவரை இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கும் அவர்களது நாடுகளில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள் தெரிவித்ததாவது, இந்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வெளிநாட்டவர்களும், இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும், வேரஹெர பிரதான அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2463/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார். வெளிநாடுகளில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைய, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னர், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இவ்வாறானதொரு வாய்ப்பு கிடைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட, அவர்களது நாடுகளில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைய இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் ஆரம்ப நடைமுறை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.