முட்டைத் தட்டுப்பாடு: கேக் சாப்பிடுவது இனி கடினமாகலாம்!

its-a-difficult-time-to-eat-cake-due-to-egg-shortage

 இலங்கையைப் பாதித்த கடும் சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கினால் கால்நடை வளர்ப்புத் துறைக்கு ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நாட்டில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கேக் உற்பத்திக்கு இது கடுமையாகப் பாதிக்கும் என்று சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.



சீதுவ, ரத்த்தொலுகமவில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையகத்தில் அண்மையில் (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,


அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் சுமார் 30 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த திடீர் அழிவு காரணமாக சந்தையில் முட்டை விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வருடாந்த கேக் விற்பனையில் சுமார் 25 சதவீதமானது கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு காலப்பகுதியில் நடைபெறுவதால், அந்தக் காலப்பகுதியில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது இத்தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.


பேக்கரித் தொழிலைத் தொடர்வதற்கு மாவு, சீனி, முட்டை மற்றும் மார்கரின் ஆகிய நான்கு மூலப்பொருட்கள் அத்தியாவசியமான காரணிகள் என்று சுட்டிக்காட்டிய தலைவர், முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டால் பேக்கரிப் பொருட்களின் விலைகள் கட்டாயம் உயரும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, முட்டைத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக மாற்று வழிகளை விரைந்து வழங்குமாறு ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post