இன்று (30) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் மகன் ஜோஹான் பெர்னாண்டோவை பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு கைது செய்தது. இப்பாகமுவ, கும்புக்வெவ பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரி வண்டி மற்றும் மேலும் பல வாகனங்களை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராக இருந்த காலத்தில் இந்த வாகன துஷ்பிரயோகம் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அமைச்சர் அலுவலக ஊழியர் என கூறிக்கொண்டு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று நிதி மோசடி செய்த குற்றச்சாட்டும் ஜோஹான் பெர்னாண்டோ மீது சுமத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மேலும் தெரிவித்தது.