அபுதாபி நகரில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிப்பதற்கு இதுவரை இருந்த தடை நீக்கப்பட்டு, அனுமதிக்கும் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை, அந்த நாட்டிற்கு சுற்றுலா வரும் மற்றும் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இந்த தடையால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தனர்.
இந்த புதிய திருத்தங்களின்படி, சுற்றுலா உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற "துணை விலங்குகளை" (companion animals) அனுமதிக்க முடியும். பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் விலங்கு பராமரிப்பு தொடர்பான 2012 ஆம் ஆண்டு எண் (2) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட, 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி தீர்மானம் எண் (4) இற்கான இந்த திருத்தங்களை நகர சபை மற்றும் போக்குவரத்துத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.புதிய வழிகாட்டுதல்களின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விலங்குகளுக்காக குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும், மேலும் மொட்டை மாடிகள், பால்கனிகள் மற்றும் வெளிப்புற முற்றங்கள் போன்ற வெளிப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கூடுதலாக, சுகாதாரத் தரங்கள், விலங்கு நலன் மற்றும் விருந்தினர்களின் வசதி உறுதிப்படுத்தப்பட்டால், உட்புறப் பகுதிகளிலும் (indoor areas) விலங்குகளை அனுமதிக்கலாம். முன்னதாக, உணவகங்களுக்குள் விலங்குகளை அனுமதிப்பது பெரும்பாலும் தடைசெய்யப்பட்டிருந்தது, மேலும் சான்றளிக்கப்பட்ட சேவை விலங்குகளுக்கு மட்டுமே விதிவிலக்குகள் இருந்தன.
நகராட்சி சேவைகள் செயல்பாட்டு ஆதரவுத் துறையின் பதில் நிர்வாக இயக்குனர் ஃபஹத் அலி அல்ஷேஹி குறிப்பிடுகையில், இந்த நடவடிக்கை அபுதாபி நகரின் விருந்தோம்பல் தரங்களை உயர் மட்டத்தில் பேணுவதோடு, அதன் உள்ளடக்கும் கொள்கையை (inclusivity) பிரதிபலிக்கிறது என்றார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரமாக அபுதாபி பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த இந்த முடிவு உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் தங்கள் வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் செல்லப்பிராணிகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. (கல்ஃப் நியூஸ் தகவல்களின்படி)