பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு முகாமிற்கு ஏற்பட்ட வெள்ள அச்சுறுத்தல் காரணமாக, அங்கு தங்கியிருந்த கைதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படையினர் கடந்த 29ஆம் திகதி விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
மகாவலி ஆறு சோமாவதி பிரதேசத்தில் பெருக்கெடுத்து ஓடியதால், முகாம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால், இராணுவ டாங்கிகள், பஸ் வண்டிகள் மற்றும் லொறிகள் பயன்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் சேனாபுர மூன்றாம் நிலை பயிற்சி மையத்திற்கு விரைவாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த அவசர அனர்த்த நிலைமையின் போது செயற்பட்ட இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டிருந்த 359 கைதிகளின் உயிர்களை பாதுகாப்பாக காப்பாற்ற முடிந்துள்ளது. அத்துடன், முகாமில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 150 பேரும் இந்த விசேட வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக சேனாபுர முகாமுக்கு மாற்றப்பட்டதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எல். பி. ஜே. குமாரசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை தணியும் வரை இவர்கள் அனைவரும் சேனாபுர பயிற்சி மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கமளித்த சேனாபுர முகாமின் உயர் இராணுவ அதிகாரி ஒருவர், அழைத்து வரப்பட்ட அனைத்து கைதிகளும் அதிகாரிகளும் தற்போது அந்த மையத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
Tags:
News