வெள்ளம் வடிந்ததும் தொற்றுநோய் அபாயம்!

epidemic-risk-as-floods-recede

 தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதால், தொற்றுநோய்கள் மற்றும் நோய்க்கிருமி நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளது என்றும், இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க வலியுறுத்தியுள்ளார்.

முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தடையின்றி கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களை பணமாக வங்கியில் வைப்புச் செய்வதுடன், தேவைக்கேற்ப உலர் உணவுப் பொட்டலங்களாகவும் வழங்க பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


7 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த கொடுப்பனவின் கீழ், தனிநபருக்கு 2100 ரூபாவும், இருவர் கொண்ட குடும்பத்திற்கு 4200 ரூபாவும், மூவர் கொண்ட குடும்பத்திற்கு 6300 ரூபாவும், நால்வர் கொண்ட குடும்பத்திற்கு 8400 ரூபாவும், ஐவர் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு 10,500 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் நிலவும் நிலைமைக்கு ஏற்ப குழு தீர்மானங்களின்படி பொருத்தமான நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள சேறு மற்றும் குப்பைகளை அகற்றி, குடியிருப்புக்கு ஏற்றவாறு சீரமைப்பதற்காக 10,000 ரூபா முற்பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டா அவர்களால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, வீட்டின் உரிமையை பொருட்படுத்தாமல், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடியிருப்பாளரும் இந்த கொடுப்பனவைப் பெற உரிமை உண்டு என்று உதவிச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடைப்பட்டிருந்த தொடர்பாடல் பணிகள் தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த அனர்த்த நிலைமையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதால், அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post