மண்சரிவுகள், வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் வீதித் தடங்கல்களை உடனுக்குடன் அறிய road-lk.org இற்குச் செல்லுங்கள்!

to-know-immediately-about-roadblocks-caused-by-landslides-and-floods-visit-road-lkorg

 தீவு முழுவதும் உள்ள வீதிகளின் நிலைமை குறித்த தகவல்களை நேரடியாக அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு புதிய இணையவழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் போக்குவரத்து அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த புதிய இணையத்தளம் மூலம், வீதித் தடங்கல்கள், வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள், அவசர விபத்துகள் மற்றும் வீதி புனரமைப்புப் பணிகள் இடம்பெறும் இடங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க வாய்ப்பு கிடைக்கிறது.



தற்போது நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வீதி வழிகாட்டல் மென்பொருட்கள் (Navigation Apps) மூலம் வீதிகளில் ஏற்படும் சில அவசர சம்பவங்கள் குறித்த முறையான மற்றும் நிகழ்நேரத் தகவல்களை (Real-time updates) வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைபாடு காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதே இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, https://road-lk.org இணையத்தளத்திற்குச் சென்று குடிமக்கள் இந்த சேவையைப் பெற முடியும் என்பதுடன், இதன் மூலம் மிகவும் துல்லியமான மற்றும் திறமையான வீதித் தகவல் வலையமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடு முழுமையாக வீதிப் பயனர்களால் வழங்கப்படும் தகவல்களைச் சார்ந்துள்ளதுடன்


சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய எந்த மொழியிலும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. https://road-lk.org/report ஊடாக சம்பந்தப்பட்ட இடத்தின் புகைப்படங்களுடன் இந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அந்த இடங்கள் தேசிய வீதி வரைபடத்தில் உத்தியோகபூர்வமாக குறிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபகாலமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக வீதிப் போக்குவரத்து முறைமைக்கு ஏற்பட்ட பரந்த சேதங்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த முறைமை ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டாலும், இது நீண்டகாலப் பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைகளுக்கும் இந்த அமைப்பை புதுப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன்,


எதிர்காலத்தில் போக்குவரத்துப் பொலிஸாருக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை இந்த அமைப்பில் உள்ளிடுவதற்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக சில வாரங்களாகச் செயற்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்திட்டம், தேசிய மற்றும் மாகாண வீதிப் போக்குவரத்து முறைமைகளை உள்ளடக்கும் வகையில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட பின்னர் கிராமிய வீதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் தளம் ஒரு நிரந்தர சேவையாக மாறுவதற்கு முன்னர் அதன் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தீவிரமாகப் பங்களிக்குமாறும், வீதிப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அறிவிக்குமாறும் அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

Post a Comment

Previous Post Next Post