தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட அக்கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பில் மார்ச் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் நேற்று (19) குருந்துவத்தை பொலிஸ் நிலைய சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் விடுத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, குற்றவியல் வழக்கொன்றைத் தாக்கல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய அத்தியாவசிய நடைமுறைகள் குறித்து பொலிஸாரிடம் பகிரங்க நீதிமன்றத்தில் கடுமையான கேள்வி எழுப்பப்பட்டதன் பின்னர் பிறப்பிக்கப்பட்டது.இது தொடர்பாக முறைப்பாட்டாளரிடம் கேள்விகளை எழுப்பிய பிரதான நீதவான், குற்றவியல் வழக்கொன்றுக்கு அத்தியாவசியமான விசாரணை அதிகாரிகள் இருத்தல், சம்பவ இடப் பரிசோதனைகளை நடத்துதல், விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் மற்றும் சந்தேகநபர்களைக் கைது செய்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் போன்ற நடைமுறைகள் இந்த முறைப்பாட்டில் இல்லை என சுட்டிக்காட்டினார். இதுவரை எந்த அதிகாரியும் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தினார்.
மேலும், இந்த முறைப்பாடு சிறு முறைப்பாட்டுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அதன்பின்னர், சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் இல்லாததால், அவருக்கு அறிவித்தல் விடுக்க நீதவான் உத்தரவிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன் இளவரசர் 2016 பெப்ரவரி 06ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பாகவும், தும்முல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வீதிச் சட்டத்தின் கீழும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தமைக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹம்மட் முஸம்மில் ஆகிய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர், மேலும் இரண்டு தனியார் பஸ் சாரதிகள் சம்பவத்தால் வீதித் தடை ஏற்பட்டதாக சாட்சியமளித்தனர்.
குற்றவாளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, சட்டத்தரணி அன்டன் சேனாநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் ஆஜராகியது. இந்த வழக்கின் மேலதிக விசாரணை மார்ச் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.