திங்கட்கிழமை (26) முதல் தொடர்ச்சியான மருத்துவ வேலைநிறுத்தங்கள் - நோயாளிகள் நிர்க்கதியாகும் பொறுப்பை GMOA அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறது

continued-medical-strike-from-monday-26---gmoa-blames-govt-for-patient-destitution

சுகாதார அமைச்சு இணங்கிய தீர்வுகளை இதுவரை நடைமுறைப்படுத்தத் தவறியதைக் கண்டித்து, நாளை (26) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.




இன்று (25) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச, இந்த போராட்டம் ஐந்து தொழிற்சங்க நடவடிக்கைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, வைத்தியசாலை அமைப்பின் கிளினிக்குகள் அல்லது வெளிநோயாளர் பிரிவுகளில் ஏதேனும் மருந்து இல்லாவிட்டால், அந்த மருந்துகளை தனியார் மருந்தகங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைச் சீட்டுகளை வழங்காமலும், வைத்தியசாலைகளில் செய்ய முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்து கொள்ளுமாறு நோயாளிகளுக்கு அறிவுறுத்தாமலும் இருக்க வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.




அத்துடன், உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாத சூழ்நிலையில் வைத்தியசாலைகளில் புதிய பிரிவுகளை ஆரம்பிக்க இடமளிக்காமலும், அரசியல் தேவைகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்களில் கலந்துகொள்ளாமலும் இருக்க வைத்தியர்கள் இங்கு தீர்மானித்துள்ளனர்.

மேலும், ஒரு கிளினிக்கில் நோயாளியை பரிசோதிக்க தேவையான உதவி அதிகாரி ஒரு வைத்தியருக்கு வழங்கப்படாவிட்டால், அந்த இடத்திலிருந்து வெளியேற வைத்தியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.



இந்த நடவடிக்கை சேவையிலிருந்து விலகுவதல்ல, மாறாக சேவை செய்யக்கூடிய சரியான சூழலில் மட்டுமே கடமையாற்றுவது என்று சுட்டிக்காட்டிய வைத்தியர் பிரபாத் சுகததாச, நாளை முதல் ஏற்படும் நிலைமையின் முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சு, அமைச்சர் மற்றும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post