அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்வதற்கும், பணியாளர்களை நிர்வகிப்பதற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 26,095 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை நியமிக்க 2024 டிசம்பர் 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அரச சேவையின் அத்தியாவசியத் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால அட்டவணைகளை அடையாளம் கண்டு இந்தக் குழு இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்காக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.அனுமதிக்கப்பட்ட மொத்த வெற்றிடங்களில் பெரும்பான்மையானவை, அதாவது 23,344 வெற்றிடங்கள் இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 705 வெற்றிடங்களும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 452 வெற்றிடங்களும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சுக்கு 442 வெற்றிடங்களும் நிரப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளன. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு 248 வெற்றிடங்களும், மத்திய மாகாண சபைக்கு 203 வெற்றிடங்களும் இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் அடங்கும்.
மேலும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு கீழ் 167 வெற்றிடங்களும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 166 வெற்றிடங்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு 102 வெற்றிடங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 76 வெற்றிடங்களும், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 50 வெற்றிடங்களும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 37 வெற்றிடங்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளன. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அமைச்சுக்கு 33 வெற்றிடங்களை நிரப்பவும் அனுமதி கிடைத்துள்ளது.
இவற்றுடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் (23), பொது பாதுகாப்பு (19), விவசாயம் (10) மற்றும் வெளிவிவகார (10) போன்ற அமைச்சுகளிலும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வட மத்திய மாகாண சபைக்கு 06 வெற்றிடங்களும், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் தலா ஒரு வெற்றிடமும் நிரப்ப அனுமதி கிடைத்துள்ளதுடன், இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அனைத்து நியமனங்களும் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
