காலி சிறைச்சாலையின் கிணற்றில் விழுந்து உயிரிழந்த கைதியின் மரணம், முதுகெலும்பில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகவே ஏற்பட்டது என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவப் பேராசிரியர் யூ.சி.பி. பெரேரா அவர்களால் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்லையைச் சேர்ந்த 27 வயதுடைய சமரவீர கமகே மிதில மாதவ என்ற கைதி ஆவார்.
கைது செய்யப்பட்ட இவர், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக அக்மீமன பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சம்பவம் இடம்பெற்ற அன்று (15) காலை, அவர் சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது கிணற்றில் விழுந்துள்ளார். பின்னர் அவர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு முதலில் சிறைச்சாலை மருத்துவமனைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பின்னர் காலி பதில் நீதவான் பேமரத்ன திராணகம அவர்கள் சிறைச்சாலைக்குச் சென்று ஆரம்ப நீதவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உயிரிழந்தவரின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியங்களை விசாரிப்பது பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தஹநாயக்க மற்றும் சார்ஜன்ட் கருணாரத்ன (59024) ஆகியோர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள்.