
மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு நகரை மையமாகக் கொண்டு கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை வழங்குவதற்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடமையாற்றும் அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையினால் (UDA) கொழும்பு 13, சிரில் சி. பெரேரா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட 'Harbour View Residencies' வீட்டுத் திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பதினான்கு மாடிகளைக் கொண்ட இந்த நவீன வீட்டுத் திட்டத்தில் மொத்தம் 452 வீட்டு அலகுகள் உள்ளன, அவற்றில் 350 அலகுகள் இலங்கை பொலிஸிற்காக கொள்வனவு செய்யப்படவுள்ளன.
ஆரம்பத்தில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில், பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகளை உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடுகளில் வசிக்கும் அதிகாரிகளின் வாகனங்களுக்கான போதுமான வாகன தரிப்பிட வசதிகளை நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.