இலங்கையின் லொத்தர் கைத்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு சீர்திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1963 ஆம் ஆண்டு இலக்கம் 11 இற்குரிய நிதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சட்டத் தொடர் இதற்காக திருத்தப்படும்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசியம் நீண்டகாலமாகவே உணரப்பட்டு வந்ததுடன், 2017 ஆம் ஆண்டில் புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு முதன்முதலில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அதன்படி, சட்டமூல வரைவாளரால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைச் சேர்ப்பதற்கு தேசிய லொத்தர் சபை முன்மொழிந்துள்ளது. புதிய சட்டத்தின் முக்கிய நோக்கம் சந்தையின் தற்போதைய போக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப லொத்தர் சபையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
நிதி அமைச்சராக ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கி புதிய சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்குமாறு சட்டமூல வரைவாளருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.