அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு 10% சுங்க வரியை (Tariff) விதிக்க உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளார். கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு எதிராக அந்த நாடுகள் வெளிப்படுத்திய எதிர்ப்பு இதற்கு முக்கிய காரணமாகும். டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த வரி விதிக்கப்படும் என்று அவர் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார்.
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஜூன் 1 ஆம் திகதி முதல் இந்த வரி 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.பல ஆண்டுகளாக அமெரிக்கா இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு மானியங்களை வழங்கியதாகவும், அவர்களிடம் எந்த வரியையும் வசூலிக்கவில்லை என்றும் டிரம்ப் கூறுகிறார். இப்போது அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சீனா மற்றும் ரஷ்யா கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிப்பதால், உலக அமைதிக்காக அமெரிக்கா தலையிட வேண்டும் என்றும், டென்மார்க்கால் தனியாக அந்தப் பிரதேசத்தைப் பாதுகாக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"கோல்டன் டோம்" (Golden Dome) எனப்படும் ஒரு பெரிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறுகிறார். இது இஸ்ரேலின் அயர்ன் டோம் அமைப்புக்கு ஒத்த ஒரு திட்டம் என்றும், சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 150 ஆண்டுகளாக அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க முயற்சி செய்து வருவதாகவும், நேட்டோ (NATO) அமைப்பும் இதற்கு அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த அறிவிப்புகளுடன், கிரீன்லாந்தின் தலைநகரான நூக் (Nuuk) வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பலகைகளை ஏந்தி, "கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை" என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இது அந்த நாட்டின் அண்மைய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக கருதப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்பின் கருத்துக்களுக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி அமெரிக்க தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.
கிரீன்லாந்தின் உரிமையை தீர்மானிப்பது டிரம்பின் வேலை அல்ல என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவிருந்த வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க தயாராகி வருகின்றனர். ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மான்ஃபிரட் வெபர், டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த, அமெரிக்க காங்கிரஸ் குழு ஒன்று கிரீன்லாந்துக்கு விஜயம் செய்து அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. கிரீன்லாந்தை வாங்குவதை டென்மார்க் நிராகரித்த போதிலும், இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், டென்மார்க்கிற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் இராணுவ உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரை கிரீன்லாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன.
கிரீன்லாந்தில் அரிய கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் நிறைந்துள்ளன. ஆர்க்டிக் பனி உருகுவதால் திறக்கப்படும் புதிய கடல் வழிகள் காரணமாக அதன் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு உறுப்பு நாடு மற்றொரு உறுப்பு நாட்டை பலவந்தமாக கையகப்படுத்துவது சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமானது என்றாலும், டிரம்ப் நிர்வாகம் ஒப்பந்தங்களுக்கு அப்பால் முழுமையான கட்டுப்பாட்டை விரும்புவதாகக் கூறுகிறது.