இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 2026 ஜனவரி 09 ஆம் திகதி
காலை 06.00 மணியளவில் இக்காலநிலை அமைப்பு மட்டக்களப்பிலிருந்து சுமார் 170 கிலோமீற்றர் கிழக்கே நிலை கொண்டிருந்ததுடன், அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று (ஜனவரி 09) மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் கரையைக் கடந்து நாட்டிற்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. இச்சூழ்நிலையின் நேரடி தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை மற்றும் காற்றின் நிலை குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜனவரி 09 ஆம் திகதி மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அத்துடன், மேல், வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இக்காற்றின் நிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை நிலையை கருத்தில் கொள்ளும்போது, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை அல்லது 50-75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதுடன், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் பகுதிகள் தொடர்பாகவும் கடுமையான எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வட அகலாங்கு 04 - 14 இற்கும் கிழக்கு தீர்க்கரேகை 76 - 85 இற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாகும் என்பதால், அப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தற்போது அக் கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த மோசமான காலநிலை காரணமாக சொத்து மற்றும் உயிர் சேதங்களை குறைப்பதற்காக பொதுமக்கள் விசேடமாக கவனமாக இருக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக குடிசைகள் மற்றும் தற்காலிக கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுதல், கூரைத் தகடுகள் பிடுங்கப்படுதல், மின் மற்றும் தொலைபேசி கம்பிகள் அறுந்து விழுதல் அத்துடன் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நெல், வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்களுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்பதுடன், துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள படகுத் தளங்களுக்கும் சேதம் ஏற்படலாம். கரையோரத் தாழ்நிலங்கள் கடல் நீரால் மூழ்கும் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக கரையோரத் தற்காலிக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஏனைய மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பிரதேசங்களில், குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலும், ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களிலும் வாழும் மக்களும் அத்துடன் வாகன சாரதிகளும் இக்காலநிலை நிலைமை குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பித் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவசர காலங்களில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் உதவியைப் பெறுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.



