பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இரண்டு சந்தர்ப்பங்களில் இணையத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த இணையத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை கணினி அவசரப் பிரதிபலிப்பு மன்றத்திடம் (SLCERT) முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலங்கை அரச இலட்சினையை சிதைத்தமை இந்தத் தாக்குதல்களின் மிக முக்கியமான அம்சமாகும் என்றும் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.
இது மிகவும் பாரதூரமான நிலைமை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், அரச இலட்சினையை சிதைத்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையத்தளத்தின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://pubsec.gov.lk/ தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது.
அந்த இணையத்தளத்திற்குச் செல்லும்போது, அது தற்காலிகமாக செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் ஒரு செய்தி காட்டப்படுகிறது. இருப்பினும், இந்த செயலிழந்த இணையத்தளத்தில் ஹேக்கர்களால் சிதைக்கப்பட்ட இலங்கை அரச இலட்சினை இன்னும் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.