களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபருக்கு, ஒரு வெஸ்லின் போத்தலுக்குள் சூட்சுமமாக மறைத்து, நான்கு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையை வழங்க முயற்சித்த ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 9130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 5990 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6670 மில்லிகிராம் கஞ்சா மற்றும் அடையாளம் தெரியாத 4040 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகையை கண்டுபிடிக்க முடிந்தது, களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம். எல். சி. வன்னினாயக்க தலைமையிலான அதிகாரிகளின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போதே ஆகும். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபரைப் பார்க்க வந்த ஒருவரிடமிருந்த வெஸ்லின் போத்தலை பரிசோதித்த போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேகநபர், பண்டாரகம, பண்டாரகம மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் துஷார டி சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம். எல். சி. வன்னினாயக்க உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.