‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய அரசாங்கம் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து விளக்கமளிப்பதற்காக ஜூலை 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சரவைக்கும் அனர்த்த முகாமைத்துவ குழுவிற்கும் நேற்று (16) உத்தரவிட்டது.
ஜனாதிபதியும் பிரதமரும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இந்த இயற்கை அனர்த்தத்தின் போது உரிய முன் தயாரிப்புடன் செயற்பட்டிருந்தால் ஏற்பட்ட சேதத்தை குறைத்திருக்க முடியும் என்று சுட்டிக்காட்டும் மனுதாரர், பிரதிவாதிகளின் செயலற்ற மற்றும் அலட்சியமான கொள்கை காரணமாக தன்னையும் உள்ளடக்கிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தை கோருகிறார்.
குறிப்பாக, கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் கண்டி, பேராதனை, கலஹா மற்றும் கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பெரும் அழிவை கட்டுப்படுத்த வாய்ப்பிருந்திருக்கும் என்றும், பிரதிவாதிகள் கடமையை புறக்கணித்ததால் இந்த அழிவு தீவிரமடைந்தது என்றும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள அவரது அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியதால் கணினி தரவுகள் உள்ளிட்ட சொத்துக்கள் அழிந்து தனது தொழில் நடவடிக்கைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜெயசூரியவும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி சப்ரீனா அஹமதும் ஆஜராகினர்.