பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டதாவது, விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர் கே.டி. லால் காந்த அவர்கள் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்திற்கும் அவமதிப்பு செய்துள்ளார்.
குறிப்பாக, அண்மையில் மிஹிந்தலை தலைமை தேரர் வண. வலவாஹெங்குனவெவ தம்மரத்ன நாயக்க தேரரை 'வனச்சாரியா' என்று அழைத்து அவமதித்தமை இங்கு இடம்பெற்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ஒரு பௌத்த தலைவரை அவ்வாறு அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தில், 'யாரும் போரைத் தூண்டுவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லால் காந்தவின் செயல்கள் மூலம் மத வெறுப்பு பரப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு செய்யப்படும் இத்தகைய அவமதிப்புகள் மற்றும் மத வெறுப்பை பரப்புவது தொடர்பாக இந்தச் சட்டத்தின் கீழ் லால் காந்தவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி கேட்பதாக நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.
ஒரு சாதாரண குடிமகனோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரோ இத்தகைய சட்ட மீறலைச் செய்திருந்தால், அவர்கள் இப்போதே கைது செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், லால் காந்த மத வெறுப்பை பரப்பியமை மற்றும் மகா சங்கத்திற்கு அவமதிப்பு செய்தமை தொடர்பாக அரசாங்கம் இதுவரை மௌனம் காப்பது ஒரு பிரச்சினை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.