ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று விசேட அரசியல் கூட்டம் நடைபெற்றது. கலாவெவ தொகுதியின் கட்சிப் பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இக்கூட்டத்தில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த அரசியல் மேடையில் கூடியிருந்தவர்களின் அதிக கவனம் நகைச்சுவை கலந்த ஒரு நடிப்பின் மீது திரும்பியது. அண்மையில் சர்ச்சைக்குள்ளான 'மிஹிந்தலை வனசரன்' என்று ஒரு தேரரால் அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் லால் காந்தாவின் உருவத்தை ஒத்த முகமூடியை அணிந்த ஒருவர் மேடைக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு அம்சத்தை முன்வைத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உட்பட பல முக்கிய கட்சி செயற்பாட்டாளர்களும், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், இந்த கூட்டத்திற்கு முந்தைய நாள், அதாவது 16 ஆம் திகதி இரவு, அலங்காரப் பணிகள் காரணமாக ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டது. தம்புத்தேகம நகரில் கட்சி கொடிகள் மற்றும் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்த ஒரு குழுவினரை, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவினர் வந்து தடுத்தனர். அந்த அலங்காரங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவிக்கப்பட்டதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்தவர்கள் அலங்காரங்களை அகற்றுவதற்கான காரணத்தைக் கேட்டபோது, நகரில் கொடிகளைப் பறக்கவிட சட்ட அனுமதி பெறப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அலங்காரப் பணிகளில் ஈடுபட்டிருந்த கட்சி ஆதரவாளர்கள், தற்போது நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுலில் உள்ளதா என்றும், அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கின் கீழ் பொலிஸார் இந்த தடைகளை ஏற்படுத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினர். இது குறித்து கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சி கொடிகளை காட்சிப்படுத்துவதற்கு சட்டரீதியான தடை இல்லை என்றும், அரசாங்கம் தங்களுக்கு பயந்து பொலிஸாரைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் ஒரு பதிவை இட்ட நாமல் ராஜபக்ஷ, தான் தம்புத்தேகமவுக்கு வெறுப்பைப் பரப்புவதற்காக வரவில்லை என்றும், தனது கட்சி கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து அனைத்து சமூகங்களையும் மதிக்கும் ஒரு அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் அடிமட்டத் தலைமையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த கூட்டம் தொடர்பான சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த மக்கள் பணம்கொடுத்து வேறு பிரதேசங்களில் இருந்து (Manpower) அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், களுத்துறை மற்றும் புத்தளம் போன்ற தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் பலர் குற்றம் சாட்டினர். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்த போதிலும் மீண்டும் இவ்வாறான அரசியல் கூட்டங்களை நடத்துவது ஒரு கேலிக்கூத்து என்று கூறி பல சமூக ஊடகப் பயனர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.