
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வலவின் மனைவி பயணித்த காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பிரபல இசைக்குழுவின் முன்னணி கிதார் கலைஞர் ஒருவரை இந்த மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் சமன் வித்தாரணாரச்சி உத்தரவிட்டார்.
இந்த விபத்து கடந்த 17ஆம் திகதி காலை பியகம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே இடம்பெற்றுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்தியராக கடமையாற்றும் இந்திராணி ரன்வல, கடமைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து களனி - பியகம பிரதான வீதிக்கு தனது காரை திருப்ப முற்பட்டபோது, களனி திசையில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அவரது காரில் மோதியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர், பிரபல இசைக்குழுவின் முன்னணி கிதார் கலைஞரான, களுத்துறை வடக்கு, ஜாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க பிரதீப் ஜோசப் (37) என பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கொழும்பில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது நண்பர் ஒருவரை இறக்கிவிடச் சென்றுகொண்டிருந்தபோது அவர் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சந்தேகநபர் மதுபோதையில் இருந்தாரா என பரிசோதிப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுவாசப் பரிசோதனை (பலூன் டெஸ்ட்) மற்றும் பியகம வைத்தியசாலையின் வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அவர் அதிக அளவில் மது அருந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த விசேட வைத்தியர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி காலிங்க ஜயதிஸ்ஸ மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் விஜேசிங்க உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற காரும் வேறொரு வாகனத்துடன் மோதி ஒரு சிறுவன் உட்பட பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.