
பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, ஒரு பெண்ணின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குழுவினர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பொத்துப்பிட்டிய, கத்லான பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 13ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி அன்றிரவு கணவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைக் கண்ட அப்பெண்ணின் கணவரின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் அவரைப் பிடித்துள்ளனர். குறித்த பெண்ணுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி, சுமார் இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினர் அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் கான்ஸ்டபிளை வீட்டில் ஒரு நாற்காலியில் அமர வைத்து தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குமார நளவன்ச, இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி பிரதேசத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதில் தீவிரமாகப் பங்களித்த ஒரு அதிகாரி என்றும், அன்றைய தினம் ஒரு கடமைக்காகச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு குழுவினர் வழிமறித்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் நிலைய பொறுப்பதிகாரி வலியுறுத்தினார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர மற்றும் இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜயரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பொத்துப்பிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.