தலங்கம, பழைய படபொத்த வீதியில் அமைந்துள்ள இருமாடி வீட்டில் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் இன்று (12) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 72 வயதுடைய அரச அச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி ஆவார். அவர் ஓய்வுபெற்ற பின்னரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இருமாடி வீட்டின் மேல் மாடி வாடகைக்கு வெளிநபர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு வீட்டின் கீழ் மாடியில் இருந்து திடீர் சத்தம் கேட்டதால் அவர்கள் கீழே வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டின் உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
இந்தக் கொலை எந்தக் காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.