திருகோணமலையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்

venerable-kassapa-thero-who-was-imprisoned-in-trincomalee-has-called-off-his-fast

திருகோணமலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் ஆரம்பித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (15) மாலை முடிவுக்கு வந்துள்ளது.




புல்முடே அரிசிமலை ஆரண்ய சேனாசனாதிபதி வணக்கத்துக்குரிய பனாமுரே திலகவன்ச தேரர் சிறைச்சாலைக்குச் சென்று அவருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகவும், அப்போது சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய பானத்தை ஏற்றுக்கொண்டு அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 14ஆம் திகதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறைச்சாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை நிராகரித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.




திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி தஹம் பாடசாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், விகாராதிபதி தேரரும், தாது சபை உறுப்பினர்களும் அங்கு புத்தர் சிலையை வைப்பதற்கு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான சம்பவங்களே இந்த கைதுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

குறித்த காணியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் பேரில், அன்றிரவே புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஏற்பட்ட பதற்றமான நிலைமை மற்றும் மோதல்கள் காரணமாக இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



எவ்வாறாயினும், கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மறுநாளே அதே இடத்தில் மீண்டும் புத்தர் சிலையை வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். பின்னர், விகாரையின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுமாறு தரப்பினருக்கு அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில், குறித்த வழக்கு நேற்று (14) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில், விகாராதிபதி வணக்கத்துக்குரிய திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்போது, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்களைச் சமர்ப்பித்தனர். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், நான்கு பிக்குகளையும் ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post