நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம், பெரிய அளவிலான முச்சக்கர வண்டி திருட்டு கும்பலுடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 டிசம்பர் 28 அன்று மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் விளைவாக, சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 11 முச்சக்கர வண்டிகளை பொலிஸ் பொறுப்பில் எடுக்க முடிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, புலனாய்வு அதிகாரிகள் முதலில் இரு சந்தேகநபர்களை 2026 ஜனவரி 10 அன்று கைது செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் ஜனவரி 11 அன்று இத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டார். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மிரிஹான பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியொன்று குருவிட்ட பிரதேசத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. மேலும், யட்டியாந்தோட்டை, பலங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பத்து திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் 30, 32 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும், களனி, அம்பலாந்தோட்டை மற்றும் பரக்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளின் நிறம், சேசிஸ் இலக்கங்கள் மற்றும் என்ஜின் இலக்கங்களை நுட்பமாக மாற்றியுள்ளனர், அத்துடன், போலியான இலக்கத் தகடுகளையும் ஆவணங்களையும் தயாரித்து அவற்றை விற்பனை செய்ய தயாராக வைத்திருந்ததும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.