தனது பதவிக்காலம் முடிவடைந்து அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருக்கும் இந்நாட்டுத் தூதுவர் ஜூலி சங் அம்மையார் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார். இச்சந்திப்பில் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்காக ஜூலி சங் அம்மையார் வழங்கிய ஆதரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
தனது பணிக்காலத்தில் தூதுவர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.இந்த பின்னணியில், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்த, தற்போது எதிர்க்கட்சியின் கருத்துக்காக தனியாகக் குரல் கொடுக்கும் பிவிதுரு ஹெல உருமயவின் உதய கம்மன்பில, ஜூலி சங் அம்மையார் வெளியேறுவது குறித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் பகிரங்கமாகப் பாற்சோறு சாப்பிட்டுள்ளார்.
அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஜூலி சங் வெளியேறுவதைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பட்டாசுகள் கொளுத்தப்பட வேண்டும் என்றும், தப்பு அடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கடந்த போராட்டக் காலத்தில் அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங் அம்மையார் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டார். மக்களின் எழுச்சியை அடக்குவதற்காக ஒடுக்குமுறை நடவடிக்கைக்குச் செல்ல கோட்டாபய அரசாங்கம் தயங்கியது, அமெரிக்கத் தூதுவர் மூலம் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது உதய கம்மன்பில ஆதரவளித்த அரசாங்கம் வீழ்ச்சியடைய அவரது இந்த துணிச்சலான நிலைப்பாடு காரணமாக அமைந்தது.