இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பு உலகளாவிய தரவரிசைக் குறியீடுகளில் மேம்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் உயர்கல்வித் துறையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக சர்வதேசமயமாக்கல் திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது அத்தியாவசியமான காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து வருட காலப்பகுதிக்குச் செயற்படும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கை பௌத்த பிக்கு பல்கலைக்கழகத்திற்கும் தாய்லாந்தின் மகா மகுட் பௌத்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒரு விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் பீடங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஒத்துழைப்பு ஆராய்ச்சிகள், கல்விப் பட்டறைகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், இலங்கை பௌத்த பிக்கு பல்கலைக்கழகம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள நாலந்தா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இது தவிர, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் போலந்தின் எஸ். ஜி. எச். வார்சோ பொருளாதாரப் பள்ளிக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதாரத் துறையில் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, கூட்டு வெளியீடுகளை வெளியிடுவது அத்துடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பரிமாற்றத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.