அஸ்வெசும பயனாளிகளுக்கு இரண்டு முறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் தொடர்பில் உண்மை நிலையை தெளிவுபடுத்தி நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட காலத்திற்காக பயனாளிகளுக்கு அந்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது, அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் கட்ட அனைத்து பயனாளிகளுக்கும் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தவிர, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விசேட கொடுப்பனவொன்றை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக அந்த சபை சுட்டிக்காட்டுகிறது. இந்த விசேட கொடுப்பனவின் கீழ், மிகவும் வறிய பிரிவினருக்கு ரூபா 7,500 உம், வறிய பிரிவினருக்கு ரூபா 5,000 உம், ஆபத்தான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ரூபா 2,500 உம் வழங்கப்படவிருந்தது. எவ்வாறாயினும், ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் முறைமை மூலம் மாதத்திற்கு இருமுறை கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தினால், இந்த விசேட புத்தாண்டு கொடுப்பனவு முறைமைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட கோப்புகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர கொடுப்பனவு நடவடிக்கைகளுக்காக, சுமார் 17 இலட்சம் பயனாளிக் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 90,000 கோப்புகள் கொண்ட SLIP கோப்புகளாக இலங்கை வங்கி முறைமைக்கு பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தவறு காரணமாக, ஒரு கோப்பு இரண்டு முறை முறைமையில் உள்ளிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 'வறிய' பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் சிலருக்கு இரட்டை கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த தவறு கண்டறியப்பட்டவுடன், நலன்புரி நன்மைகள் சபை உடனடியாக உரிய கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கும், வங்கிகளுக்கு அறிவித்து அந்த பணத்தை சபையின் கணக்குகளுக்கு மீண்டும் வரவு வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தது.
அவ்வாறு இரட்டை கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு முன்னர், 49,759 பயனாளிகள் தமது கணக்குகளிலிருந்து ரூபா 248,795,000 தொகையை பெற்றுக்கொண்டதால், அந்த பணத்தை வங்கிகள் மூலம் மீண்டும் அறவிட முடியவில்லை. அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் மேலதிகமாகப் பெற்ற பணத்தை எதிர்வரும் மே மாத அஸ்வெசும கொடுப்பனவில் கழிப்பதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சபை வலியுறுத்துகிறது. இந்த சம்பவம் காரணமாக அரசாங்கத்திற்கு எந்தவிதமான நிதி இழப்போ அல்லது நிதி முறைகேடோ ஏற்படவில்லை என்றும், சேவைத் தேவையின் அடிப்படையில் விரைவாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் காரணத்தினால் மட்டுமே இது நிகழ்ந்தது என்றும் அந்த சபை மேலும் குறிப்பிடுகிறது.