
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் இணையக் குற்றங்களில் ஈடுபடுவது கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.யூ. வூட்லர் நேற்று (07) தெரிவித்தார்.நாராஹேன்பிட்டியிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டதுடன், வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகைக்கு விடும்போது அது தொடர்பில் பொலிஸாருக்கு கட்டாயமாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கணினி குற்றப் பிரிவின் தரவுகளின்படி, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நாட்டில் இணையக் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். மக்கள் தமது பொறுப்புகள் குறித்து உரிய கவனம் செலுத்தாததால், பல்வேறு மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல வெளிநாட்டவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதுடன், கணினி குற்றங்கள் தொடர்பாகவும் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இன்று வரை பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 628 வெளிநாட்டவர்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். குருந்துவத்தை, கல்கிஸ்ஸ, நீர்கொழும்பு, போத்தல, சிலாபம் மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்திய, வியட்நாம், சீன, மியன்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடிய நாட்டவர்கள் அடங்குவர்.
இவ்வாறான பின்னணியில், தமது வீடு, கட்டிடம், ஹோட்டல் அல்லது ஏதேனும் நிறுவன வளாகத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும்போது மிகவும் விவேகத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொலிஸார் வலியுறுத்துகின்றனர். ஒரு தரப்பினருக்கு சொத்து ஒன்றை வாடகைக்கு வழங்கினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க மக்கள் கடமைப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பந்தப்பட்ட வாடகைதாரர்கள் குறித்த தகவல்களை எந்த நேரத்திலும் வழங்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு உரிய கண்காணிப்பு இன்றி செயற்படுவதால், வெளிநாட்டவர்கள் அந்த இடங்களில் தங்கியிருந்து மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கைகளின் பொறுப்பை சொத்து உரிமையாளர்களும் ஏற்க நேரிடும் என்றும், அதன் மூலம் அவர்களும் அநாவசியமாக குற்றவாளிகளாக மாறுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளித்தார்.