தித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் கடுமையான அனர்த்த நிலை ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சூறாவளி தற்போது இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 131க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
எவ்வாறாயினும், சூறாவளிக்குப் பின்னரும் ஆறுகளில் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதால், வெள்ளத்தால் ஏற்படக்கூடிய சேதங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றன.
தீவு முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிவாரண சேவைகளை ஒருங்கிணைப்பதற்கும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் ஒழுங்குவிதிகள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தித்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறி தென்னிந்திய கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், ஆனால் அதன் மறைமுக தாக்கத்தால் பலத்த மழையும் பலத்த காற்றும் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு அமைப்புகள் செயலிழந்ததால், அனர்த்தத்தின் உண்மையான சேதத்தை மதிப்பிடுவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்புகளுக்கு மத்தியில், நிவாரணக் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய கடுமையாக முயற்சித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது புயலின் அறிகுறிகள் எவ்வாறு வெளிப்பட்டுள்ளன என்பதை இந்திய ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளன.
Tags:
News