குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுவாசப் பரிசோதனைக் குழாய்கள் (பலூன்கள்) தீவு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதுவரை 75,000 சுவாசப் பரிசோதனைக் குழாய்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, அவை பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மேலும் 250,000 குழாய்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.புதுவருட காலத்தில் தீவு முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணகல தெரிவித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் மரண விபத்துகள் மற்றும் சொத்து சேதங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தினார். சிங்களப் புத்தாண்டு காலப்பகுதிக்குப் பின்னரும், குறிப்பாக இரவு நேரங்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்காக, பொலிஸ் நிலையங்கள் தொடர்ச்சியாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கடந்த 24ஆம் திகதி மட்டும் தீவு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களால் 136 குடிபோதை சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.