கேகாலை, ஹெட்டிமுல்ல, திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து, உரித்த தேங்காய்கள் பத்து திருடியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் முன்தினம் (23ஆம் திகதி) கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கேகாலை, ஹெட்டிமுல்ல, திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக கேகாலை, திக்வெல்ல, தெவெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் முறைப்பாடு செய்திருந்தார். அவர் தனது வயதான தாய், மகள் மற்றும் மருமகனுடன் அந்த வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி பகல் வீட்டில் பின்புற அறையில் இருந்த உரித்த தேங்காய்கள் பத்து காணாமல் போயுள்ளதாக அவரது முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், குறித்த பெண் அயல் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமரா காட்சிகளை அவதானித்தபோது, அதில் தேங்காய்களை திருடிய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்த அவர், அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த தேங்காய்களை திருடிச் சென்றது அந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய உதவி பொலிஸ் பரிசோதகர் சேனாநாயக்கவால் சந்தேகநபர் முன்தினம் (23ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (24ஆம் திகதி) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.