முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கொழும்புக்கு வந்து, நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் குடியேறியுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே உறுதிப்படுத்தினார்.
ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் (திருத்த) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அவருக்கு அரசினால் வழங்கப்பட்டிருந்த வீடுகள் உள்ளிட்ட வசதிகள் இரத்து செய்யப்பட்டமையே இந்த இடமாற்றத்திற்கு காரணமாகும்.
விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி நேரடியாக தங்கல்லையில் அமைந்துள்ள காள்ரன் இல்லத்திற்குச் சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்தார். இருப்பினும், அரசியல் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கும் வசதியாக அவர் மீண்டும் கொழும்புக்கு வந்து குடியேறியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நுகேகொட, மிரிஹான பிரதேசம் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களான சாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பல தசாப்த கால பாரம்பரிய வசிப்பிடமாகும். மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிய காலத்திலும் தனது தினசரி பயணங்களை மிரிஹான இல்லத்தில் இருந்தே தொடங்கினார்.
எவ்வாறாயினும், இந்த புதிய குடியேற்றத்துடன் தங்கல்லையில் நடைபெற்று வந்த அவரது பிரச்சார நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாகவும், மிரிஹான இல்லத்திற்கு வெளியாட்கள் நுழைவது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.