சர்வதேச R&B பாடகர் நீ-யோ (Ne-Yo) கொழும்பில் நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சியை திடீரென ஒத்திவைத்தமைக்காக இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். சமூக ஊடகங்கள் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்ட அவர், "தவிர்க்க முடியாத காரணங்களால்" நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டமை குறித்து தான் மிகவும் வருந்துவதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், விரைவில் மீண்டும் இலங்கைக்கு வந்து ரசிகர்களை சந்திக்க எதிர்பார்ப்பதாக நீ-யோ மேலும் வலியுறுத்தினார்.'பிரவுன் பாய் பிரசன்ட்ஸ்' (Brown Boy Presents) என்ற அமைப்பினால் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி சுகததாச திறந்தவெளி விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. எவ்வாறாயினும், 15,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் டிக்கெட்டுகளை விற்று பெரும் வருமானத்தை ஈட்டிய பின்னர், சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் காரணமாக நிகழ்ச்சியைப் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொழும்புப்பிட்டி பொலிஸாருக்கு பல மோசடி முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த பாரிய நிதி மோசடி குறித்து அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.