இலஞ்சம் பெற்று கைதான கம்பஹா குற்றப்பிரிவு OIC 11 நாட்கள் விளக்கமறியலில்

gampaha-crime-oic-caught-taking-bribe-remanded-for-11-days

கம்பஹா தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.




ஜா-எல, தந்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்க நகைகளை வாங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக சந்தேகநபரான பொறுப்பதிகாரி மூன்று இலட்சம் ரூபா பணத்தையும், மூன்று கால் பவுண் தங்கத்தையும் இலஞ்சமாக கோரியிருந்தார். அந்தப் பணத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.




கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான முன்னிலையில் இன்று சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணைகள் மேலும் நடைபெற்று வருவதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவரை அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்காக ஆஜரான சட்டத்தரணி, அவரது இரண்டு பிள்ளைகளும் இம்முறை உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். எவ்வாறாயினும், பிணை விண்ணப்பம் ஒரு எதிர்கால திகதியில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post