கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசமோட்டைப் பிரதேசத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பரந்தன் திசையிலிருந்து முல்லைத்தீவு திசை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் பேருந்தும் அதற்கு எதிர்த்திசையில் வந்த ஒரு மோட்டார் காரும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் காரில் சாரதியுடன் சேர்த்து ஐவர் பயணித்துள்ளனர். மோட்டார் காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்தவர்களில் சாரதியும் மேலும் மூவரும் அடங்குவர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 32, 34 மற்றும் 46 வயதுடைய விஸ்வமடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். விஸ்வமடு பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் காரும் வவுனியாவிலிருந்து விஸ்வமடு நோக்கிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் காரில் பயணித்த மற்றைய நபர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். பேருந்தின் சாரதியும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.