
கடுவெல-கொல்லுப்பிட்டிய பிரதான வீதியில் வன்முறையாக நடந்துகொண்டு, ஆயுதம் போன்ற ஒரு கருவியால் பல வாகனங்களுக்கு சேதம் விளைவித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (12) மாலை இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் நான்கு வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு, சந்தேகநபரை துரத்திச் சென்று குறுகிய காலத்திற்குள் அவரைக் கைது செய்ய முடிந்தது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகிறது.