குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னால் ஸ்னைப்பர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் என இலங்கை இராணுவத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று கோட்டை பதில் நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் வெளிப்படுத்தினார். இந்த இரண்டு அதிகாரிகளும் ஒரு விசேட பயிற்சிக்குச் சென்று திரும்பி வரும்போது இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சிவில் உடையில் கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் வீதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். அப்போது சந்தேக நபர்களிடம் அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்த எந்த ஆவணமும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பதில் நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேகநபரான இராணுவ அதிகாரிகள் இருவரையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், அவர்களை சம்பந்தப்பட்ட இராணுவப் பிரிவின் கட்டளை அதிகாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.