தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர் யாலினி ராஜேந்திரன் அம்மையாரின் தெஹிவளை, கிரிகரி வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், உறுப்பினர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் கொள்ளையடிக்கும் நோக்குடன் போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் ஒருவர் உறுப்பினரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் பதற்றமடைந்ததால் சந்தேகநபர் இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் உறுப்பினரின் வலது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்போது அதனை தடுக்கச் சென்ற உறுப்பினரின் மகனையும் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பிடிக்க உறுப்பினரின் தந்தை முயற்சித்துள்ளார். அப்போது சந்தேகநபர் வீட்டில் இருந்த பித்தளை பூந்தொட்டியை எடுத்து தந்தையின் தலையில் தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக செயல்பட்ட அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேகநபரைப் பிடித்து தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த உறுப்பினர், அவரது தந்தை மற்றும் மகன் ஆகியோர் சிகிச்சைக்காக தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.