கண்டி மாவட்டச் செயலகத்திற்குள் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களை பீதியடையச் செய்யும் நோக்கில் பரப்பப்பட்ட ஒரு பொய் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இன்று (27) காலை அறிக்கை வெளியிட்ட பொலிஸார், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
நேற்று (26) இந்த அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு செய்தி கிடைத்திருந்தது. அதில் கண்டி மாவட்டச் செயலகத்திற்குள் ஐந்து இடங்களில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் குறித்து கண்டிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொலிஸ் மோப்பநாய் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் இராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டிசம்பர் 26 ஆம் திகதி காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான தேடுதல் நடவடிக்கைகளில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. அதன்படி, இந்தத் தகவல் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்பட்ட ஒன்று என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் வலியுறுத்தினர்.